முகவுரை

நாராயண பட்டத்திரி இயற்றிய நாராயணீயத்தின் முதற் பாடலை இரண்டு ப்லாகுகளில் விவரித்தேன். https://avagamanam.com/2022/02/நான்-கண்ட-நாராயணீயம்-முத/

https://avagamanam.com/2022/02/நான்-கண்ட-நாராயணீயம்-முத-2/.

அவர் இயற்றிய கவிதையின் காரணம் அறிந்தும், பொதுவாக மக்களின் மனதில் பக்தியால் அடையமுடியாதது எதுவும் இல்லை என்ற நம்பிகை வேரூன்றியுள்ளது. நம்பிக்கை வேறு, உண்மை வேறு என்பது நமக்கு நன்கு தெரிந்தும் இந்த நம்பிக்கையை அசைக்க முயவில்லை! இது பற்றி பட்டத்திரியின் நாராயணீயத்தில் அஜாமில சரிதையில் ஏழாவது கவிதையில் ஒரு பதிகத்தில் விளக்குகிறார் (நாராயணீயம்: தஶகம் 22, ஶ்லோகம் 7).

முன்னுரை

‘படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோயில்’ என்ற முதுமொழி நம் எல்லோருக்கும் தெரியும். இதன் உட்பொருள் என்ன? நம் குணக்குறைகளை இறைவனைத்தொழுவதால் மாற்ற இயலாது என்பதே. இந்த உட்கருத்தை மனதில் வைத்து நோக்கின் இதப்பழமொழி இக்கால வாழ்க்கையிலும் உண்மையாகவே உள்ளது. சற்று சிந்தித்தால் நாம் எல்லோரும் பெரும்பாலும் ஓரளவு இந்த முதுமொழிப்படியே வாழ்க்கை நடத்துகிறோம். மிகப்பெரிய பக்தனும், அப்பக்தியை பரப்பும் பற்பல கதாகாலக்‌ஷேபம் செய்பவர்களும் இதற்கு உட்பட்டவர்களே என்பதையும் காண்கிறோம். இக்காலத்தில் மட்டுமல்ல, எக்காலத்திலும் இப்படியே உள்ளது என்பது பற்றி நம் புராணங்களில் பல உதாரணங்கள் உள.

உதாரணமாக, இராவணனை விடப்பெரிய சிவபக்தனை நினைப்பதரிது. அந்த சிவ பக்தி அவன் ராமரின் மனைவியைக் கவர்ந்து சிறைப்படுத்துவதை மாற்றவில்லை. மிகப்பெரிய தவம் செய்த விஶ்வாமித்திரர் மேனகை வசமானார், அவர் பெற்ற பெண் குழந்தை சகுந்தலையையும் அதன் அன்னை மேனகையையும் கைவிட்டார். பெரிய தபஸ்வி துர்வாசரால் அவர் சினத்தை அடக்க முடியவில்லை. தர்மம் எது அதர்மம் எது என்று அறிந்தும் துரியோதனன் அதர்ம வழியிலே சென்றான். மனிதனது மனம் பக்தியால் மாறவில்லை, அக்காலத்திலும் இன்றும். ஏன்? சினம், பேராசை, பொறாமை, பொய்மை, ‘உள்ளொன்று வைத்துப் புறமொன்று’ பேசுதல் என்ற நம் பற்பபல சிறுமைகள் எதுவும் பக்தியால் போவதில்லை. இதன் காரணத்தை நாராயண பட்டத்திரி ஓரிடத்தில் சொல்கிறார். இந்தக் கவிதை பற்றியே இந்த ப்லாக்.

இக்காலத்தில் ஸம்ஸ்க்ருத ஶ்லோகங்களின்அல்லது வேதங்களின் பொருளை அறிவது மிகவும் கடினம். மேலும் ‘பொருளை அறியவேண்டியதில்லை, சொன்னால் போதும், மந்திரங்களின் மகிமை உன் ஆசைகளை நிறைவேற்றும்’ என்ற மரபில் ஊறிய நம் பெரியோர்கள் சொல்கின்றனர். அதை நம்பும் நாம், நமக்கு நேரமோ,அல்லது ஆசையோ இல்லாததால் மந்திரங்களின், அல்லது பாடல்களின் பொருளை அறிய முயல்வதில்லை! இது காரணமாக மனம் இந்த பாட்டிலோ மறையிலோ ஈடுபவடுவதும் சுலபமாக வருவதில்லை. பல்லாயிரவர் நாராயணீய பாராயணம் செய்கின்றனர், அதன் பலனையும் உணர்கின்றனர். இருப்பினும், நாம் பக்தியடன் பாராயணம் செய்யும் ருத்ரம், புருஷஸூக்தம் என்ற மறைகளின், அல்லது பட்டத்திரியின் பக்தி ததும்பும் பாடல்களின் ஆழ்ந்த பொருளை அறிந்தால், மனம் பாராயணத்தில் நன்கு வசப்படுவதால் நம் பக்தி திடமாகும். நான் வடமொழி சற்று ஆழ்ந்து படித்ததால் இந்த ஒரு நாராயணீய சுலோக பத உரையையும் விளக்க உரையும் எழுத முயற்சிக்கிறேன். அதன் மூலம் ஏன் நம் ஆசை, தேவைகளை நிறைவேறவே உள்ள பக்தியால் நம் மனம் மாறுவதில்லை என்பதை உணர்ந்து நம் அறிவுக்கும் நம் நடத்தைக்கும் உள்ள பெரும் இடைவெளியைக்குறைக்க தளறா முயற்சி செய்வோம் என்ற நம்பிக்கையில் இவ்வுரைகளைத் தொடங்குகிறேன். முதலில் பட்டத்திரியின் 22ஆவது தஶகத்தின் சுருக்கம்:

அஜாமிலர் கதை

பட்டத்திரி நாராயணீயத்தின் 22ம் தஶகத்தில் 11 பாடல்களில் அஜாமிலர் சரிதத்தைப் புனைந்தார். இப்பாடல்களின் சுருக்கம்: அஜாமிலர் அந்தண குலத்தவர். மறைகளில் விதித்த சடங்குகளை செய்வதன் வழி இறைவனைத் துதித்தவர். அப்படி இருப்பினும் ஒரு நாள் தந்தையின் ஆணைப்படி வேத சடங்குகளுக்கு சாமக்கிரிகள் தேட காட்டுக்குச் சென்றார். அங்கு ஒரு பெண்மணியின் வசமாகி ‘பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக்கெடும்’ என்ற வள்ளுவர் சொற்படி காலம் கடத்தினார் அக்கானகத்தில். அவர் காலம் வந்தபோது யமதூதர்கள் அவர் உயிரை நீக்க வந்தனர். அவர் மிக பயந்து தன் மைந்தனை நினைத்து (அவன் பெயரான) நாராயணா! நாராயணா! என்று புலம்பினார். அப்போது அவரது கடந்தகால இறைவணக்கத்தின் பலனாகவும் கடைக்காலத்தில் இடையறாது இறைவனின் பெயரைச் சொன்னதாலும், அந்த நாராயண தூதர்கள் அவனைக்காத்தனர். அதனால் யமதூதர்கள் பக்தியைப் போற்றினர்.

இக்கதை நம் மரபைப் பற்றி சிந்திக்க வைத்தது. பொதுவாக நம் பழைய மரபுப்படி உள்ள நம் குழந்தைகளின் பெயர்களில் சில உதாரணங்கள் — நாராயணன், ராமன், கணேசன், கலாவதி, உமா, லக்ஷ்மி. ஏன்? நம் குழந்தைகளை அழைக்கும் போது இறைவனின் பெயரை சொல்வது ஒரு இறைவணக்கமாகத் திகழட்டும் என்பது காரணம். இக்கதையில், மரண பயத்தால் உந்தப்பட்டு வேறெவ்வித எண்ணமுமின்றி இறைவன் பெயரை முறையிட்டதால் அந்த நாராயணனின் அருளால் அஜாமிலர் வைகுண்டம் அடைந்தார் என்று இக்கதை கூறுகிறது.

பட்டத்திரி ஆழ்ந்த பக்தர், விவேகி. இந்த பாகவதக் கதையையும் அதன்மூலம் இறைவனைத் துதிப்பினும், பகுத்தறிவு வினவின கேள்விகள் பல அவர் மனதில் தோன்றின! அக்கேள்விகள் இக்காலக் கல்வியில் மட்டும் திளைப்பவர்களுக்கும், கடவுள் நம்பிக்கை அற்றவர்களுக்கும் தோன்றும். அவை “அவ்வளவு பெரிய பக்திமானை ஏன் அவ்விறைவன் முதலில் கெடுவழி செல்லவிட்டுப் பின் காத்தார்? ஏன் ‘வருமுன் காப்பது நலம்’ என்று இறைவன் அறியாதானா? மேலும் மாபெரும் குற்றங்கள் செயினும் கடைசியில் இறைவன் பெயரைச் சொன்னால் போதுமா?” இவ்வாறு பற்பல ஐயங்களை பட்டத்திரியின் இப்பதிகம் நீக்குகிறது.

பக்தியால் எதையும் அடைய முடியுமா?

பட்டத்திரி இந்தக் கேள்விகளை மனதில்கொண்டு அந்த 22ம் தசகத்தல் ஏழாம் பாடலில் சொல்கிறார். 

ஶ்ருதிஸ்ம்ருப்யாம் விஹிதா வ்ரதாதய: புனந்து பாபானி ந லுனந்து வாஸநாம்
அனந்த ஸேவாது நிக்ரந்ததி த்வயீம் இதிப்ரபோ புருஷா ப்பாஷிரே.

(நாராயணீயம் — தஶகம் 22, ஶ்லோகம் 7) 

பதவுரை

ஶ்ருதி-ஸ்ம்ருதிப்யாம் விஹிதா: வ்ரதாதய: —மறை, அதை ஒட்டிய மரபுகளால் போதித்த விரதங்கள்
புனந்து பாபானி — பாவங்களை நீக்குகின்றன ந லுனந்து வாஸநாம் — நம் குணங்களை அகற்றாதன
அனந்த ஸேவா து — அப்படி இருப்பினும், (இறைவனுக்கு) எல்லையற்ற சேவைசெய்வது
த்வயீம் நிக்ருந்ததி — இவ்விரண்டையும் (பாவங்களையும் நம் குணக்குறைகளையும்) களைகிறது
இதி — என்று புருஷா: — யமகிங்கரர்கள் ப்ரபாஷிரே — கூறினர் ப்ரபோ — ஏ ப்ரபுவே (இறைவா)!

பொழிப்புரை

வடமொழி வார்த்தைகளின் விளக்க உரை இன்றி இப்பாடலின் ஆழத்தை உணர முடியாது. அதன் பொருட்டே விளக்க உரை உள்ளது.

ஶ்ருதி-ஸ்ம்ருப்யாம் விஹிதா: வ்ரதாதய: — ஶ்ருதி, ஸ்ம்ருதி இவைகளால் விதிக்கப்பட்ட விரதங்கள் — ஶ்ருதி: வேதங்கள். இந்த பதம் ஶ்ரு, கேட்டல் என்ற வினைச்சொல்லின் பெயர்ச்சொல் உருவம். வேதங்கள் மனிதர்களால் இயற்றப் பட்டவை அல்ல என்பது நம் நம்பிக்கை. வேதங்களில் உள்ள விரதங்கள் சில: உண்மை பேசு, தர்மம் கடைப்பிடி, இறைச்சி உண்ணாதே, மதுபானம் குடிக்காதே, நீரில் மலஜலம் கழிக்காதே. ஸ்ம்ருதி: மனிதன் நினைவில் கொண்டது, ஸ்ம்ரு, நினைவு கொள்ளுதல் என்ற வினைச்சொல்லைஅடிப்படையானது. அதாவது, வேதங்களைத் தொடர்ந்து அவைகளின் குறிக்கோளை ஒட்டி மனிதனால் விதிக்கப்பட்டவை. வேத மந்திரங்கள் இவைகளில் பயன் படுத்தப்படுகின்றன. உதாரணங்கள் — பெயரிடுதல், உபநயனம், விவாகம், சீமந்தம், அந்திம சடங்குகள், தர்ப்ணங்கள், விரதங்கள். இந்த விரதங்களின் பயன் என்ன, இவைகளால் அகற்ற இயலாதது என்ன என்பதை பட்டத்திரி இந்த பாடலின் இரண்டாவது அடியில் சொல்கிறார்.

“புனந்து பாபானி”. (இந்த விரதங்கள்) பாவங்களை நீக்குகின்றன.
பாவம் என்பது என்ன? உலகநியதிக்கு மாறாக செய்யும் தீவினைகள். புண்ணியம் என்பது உலக நியதியை ஒட்டிய நன்மை செயல்கள். இவை பற்றிய நம் மரபுக்கொள்கைகளை சற்று விளக்க வேண்டும் முதலில். இல்லாவிடில் இப்பாடலின் ஆழ்ந்த கருத்தை உணர இயலாது. ல் செய்யப்படுபவை, ஆடுமாடுகளால் அல்ல! நம் பிறப்பிறப்பு பற்றி அருணகிரிநாதர் திருப்புகழில்:

‘எழுகடல் மணலை அளவிடின் அதிகம் எனது இடர் பிறவி அவதாரம்’
(திருப்புகழ் பதிகம் 493)
https://kaumaram.com/d_loads/kdc/pdfs.php?kdc=kdcc241pd

அவ்வெண்ணிலாப் பிறப்பில் நாம் செய்த நன்மை தீமைகளின் பலன் நம் புண்ணியம், பாவம் என்ற ஊழ்வினைச் சுமை (ஸஞ்சித கர்மம்). அச்சுமையில் ஓருசிறு பகுதியான ஊழ்வினை (பிராரப்த கர்மம்) எனப்படுவது நமக்கு இம்மனிதப்பிறப்பளித்தது. இப்பிறப்பில் நமக்கு இன்ப துன்பங்கள் வருவன இவ்வூழ்வினைப் பயனே. புண்ணியச்சுமை இன்பங்களையும் பாவச்சுமை துன்பங்களையும் அளிக்கின்றன. மேலும், இப்பிறப்பில் நாம் செய்யும் நன்மை தீமைகளல் வரும் புண்ணிய பாவங்களும் (ஆகாமி கர்மம்) அப்பெரும் வினைச்சுமையில் (ஸஞ்சித கர்மம்) சேரும், இவை இப்பிறவியில் பயன் தராது. இக்கொள்கையின் குறிக்கோள் மனிதனை நல்வாழ்வு வாழ வழி சொல்கிறது என்பது திண்ணம்.

ந லுலந்து வாஸநாம் (இந்த விதங்கள்) வாசனையை நீக்காது. வாசனை என்னும் வடமொழிச் சொல்லுக்கு சரியான தமிழ்ச் சொல் மணம். நாம் மணத்தை மூக்கினால் அறிகிறோம். அதன் காரணத்தை நாடி கண்ணால் கண்டு பிடித்தல் கடினம். உதாரணம் — வெகு காலத்திற்கு முன் என் தந்தை ஒரு சிறு பாடில் சந்தனத்தைலம் வாங்கினார். பயணத்தில் அது சற்று சிந்தி பக்கத்தில்இருந்த கரன்சிகளில் பட்டு அத்தைலம் ஆவியாகி மறைந்தது. ஆனால் அந்த சந்தன மணம் பல மாதங்கள் சென்றும் அக்கரன்சிகளை நீங்கவில்லை! கண்ணால் கண்டது கரன்சி, ஆனால் காணமுடியாத வாசனை நம்மை வசப்படுத்துகிறது. இது போல் மனிதனைப் பொருத்தவரை, மணம் என்பது அதன்காரியத்திலிருந்து தான் அறிய வேண்டும். உதாரணமாக, காரியம் (வினை) அடித்தல், அதன் காரணம் (வினை ஊக்கி) கோபம். கோபம் மணம் (வாசனை). நம் மரபில் கோபம் உட்பட ஆறுவிதத் தன்மைகள் உள்ளன. அவையாவன: தீவிர ஆசை, அதாவது ஒரு போருள் பற்றியோ அல்லது மனிதன் பற்றியோ தடுக்க முடியாத ஆசை (காமம்); அடையமுடியா ஆசையின் பலனான கோபம் (க்ரோதம்); மோஹம் எனும் பகுத்தறிவுக்குப் அப்பாற்பட்ட பொருளாசை (மோஹம்), தனது படிப்பு, பதவி, செல்வம், குலம் பற்றி கர்வம் (மதம்), பிறரது உயர் நிலை கண்டு பொறாமை (மாத்ஸர்யம்) என்ற ஆறுவித மன அலைகள் (ஷடூர்மி) மனிதனை ஆட்டுவைக்கின்றன. இவகளை வாஸனா என்ற ஸமஸ்கிருதச் சொல் குறிக்கிறது. இம்மன அலைகளைக் நீக்குவது நம் தன்முயற்சியால் அன்றி ‘என் கடமை’ என்று செய்யும் அல்லது கடைப்பிடிக்கப்படும் விரதங்களாலோ நம் ஆசையால் உந்தப்பட்டு கடைப்பிடிக்கப்படும் விரதங்களாலோ முடியாது.

ஶ்ருதி, ஸ்ம்ருதி விதித்த செயல்கள் செய்யாததால் பாவம் வருமா? இந்த கேள்விக்கு வேதாந்த பரம்பரையின் பதில் பற்றி இங்கு சற்று விளக்க வேண்டும்! கர்மகாண்ட வேத, ஸ்ம்ருதிப்படி விதித்த செயல்களைக் கடைப்பிடிக்காவிடில் பாவம் வரும் என்றாலும், செய்யாத செயலுக்கு எப்படி பலன் என்பது பகுத்தறிவுக்குப் பாற்பட்டதே. ஆனால், எப்படி இந்த ஸ்ம்ருதியை உணரலாம் எனின், என் வேதாந்த ஆசானின் விளக்கம் — ‘விதித்த கடமைகளை செய்யாததால், அந்த நேரங்களில் உன் மன அலைகளுக்கு நீ ஆட்படுவாய். அதன் பலம் பொதுவாக பாவமே! ஆகையால் உன் விதித்த கடமைகளைக் கடைப்பிடி’. 

இவ்வித விதிகளைக் கடமையென்றோ ஆசை நிறைவேற வேண்டியோ செய்வதால், உன் குணக்குறைகள் (உன்னை வசப்படுத்தி ஆட்டும் ஆறுவித அலைகள்) உன்னை விட்டு அகலாது! இந்த ஶ்லோகத்தின் பொருளை நான் கண்டவுடன் எனக்கு ‘ஏன் நான் காணும் பெரும் பக்திமார்கள், புகழ் பெற்ற ஆசான்கள் மற்றும் பலரது நடத்தைக்கும் பக்திக்கும் பெரிய இடைவளி உள்ளது’ என்ற பல்லாண்டுகால ஐயம் அகன்றது!

அனந்தஸேவா இதில் சில ஆழ்ந்த கருத்துகள் உள்ளன. ஏன் பட்டத்திரி பக்தி என்ற சொல்லை விடுத்து ஸேவா என்கிறார்? இந்த வடமொழிச் சொல் ‘அனந்த’ ‘ஸேவா’ என்ற இரண்டு சொல்களின் இணைப்பு (compound). முதல் ‘ஸேவா’ எனும் ஸமஸ்கிருதச்சொல் விளக்கம். இந்தச் சொல் தமிழில் சேவை என்று திரிபு அடைந்தது! திருமால் கோவில்களில் சேவை என்பதை சிலையைப் பார்ப்பது என்ற பொருளில் பயன்படுத்துவதைக் காண்கிறோம். சேவை என்னும் தமிழ் தத்சமத்திற்கு தமிழில் பணி என்ற சொல் உள்ளது 

சேவையின் ஆங்கில மொழிபெயர்ப்பு ஸர்விஸ். இங்கு என் கிறித்துவ மத நண்பர்கள் ஞாயிரன்று சர்ச் சென்று வணங்குவதை ஸர்விஸ் என்று உரைக்கின்றனர். தமிழில் பக்தி, சேவை என்று இரண்டு பதங்கள் உள. பக்தி எனும் ஸமஸ்கிருதப் பதத்தை தமிழில் பயன்படுத்தினும் அதன் பொருள் பணியே! ஏனெலில் பக்தி என்ற ஸமஸ்கிருதப் பெயர்ச்சொல் பஜ் என்னும் வினைச்சொல்லை அடிப்படையாக உள்ளது. பஜ் என்றால் பணி என்று பொருள்.

சேவையின் உட்பொருள் என்ன என்பதை சேவகன் என்ற சொல் விளக்குகிறது. சேவகன் எக்காலத்திலும் தம் தலைவனுக்கு பணி செய்பவன். தன்னைவிட என்றும் உயர்ந்தவன் தலைவன். ‘என்கடன் பணிசெய்து கிடப்பதே’ என்ற அசையாத நம்பிக்கை உள்ளவன் சேவகன். இறைவனை ஆத்திகர்கள் மாபெரும் தலைவனாகவும், தங்களை அவனது சேவகனாகவும் கருதவேண்டும், தம் ஆசைகளை நிறைவேற்றும் கடவுளாக மட்டும் எண்ணாது. இதுதான் பக்தி / சேவை / பணி். மேலும் இறைவனின் தத்துவத்தை அறிந்தால், பக்தி பணியாக திரிபு அடைகிறது.  சேவையின் உட்பொருள் என்ன என்பதை சேவகன் என்ற சொல் விளக்குகிறது. சேவகன் எக்காலத்திலும் தம் தலைவனுக்கு பணி செய்பவன். தன்னைவிட என்றும் உயர்ந்தவன் தலைவன். ‘என்கடன் பணிசெய்து கிடப்பதே’ என்ற அசையாத நம்பிக்கை உள்ளவன் சேவகன். இறைவனை ஆத்திகர்கள் மாபெரும் தலைவனாகவும், தங்களை அவனது சேவகனாகவும் கருதவேண்டும், தம் ஆசைகளை நிறைவேற்றும் கடவுளாக மட்டும் எண்ணாது. இதுதான் பக்தி / சேவை / பணி். மேலும் இறைவனின் தத்துவத்தை அறிந்தால், பக்தி பணியாக திரிபு அடைகிறது. இது பற்றி கிருஷ்ணர் கீதையில்: 

‘எக்காரியம் செயினும், எப்பொருளை அடைந்து மகிழ்ந்த போதும்
எவ்வித வேள்வி, தானம், தவம் செயினும் அவைகளை எனக்கென நினை’.
(பகவத்கீதை அத்தியாயம் 9, பாடல் 27)

இந்நோக்கில் சேவை எனும் சொல்லின் மறுபெயர் பக்தி என்று கொள்ளவேண்டும். இந்த அடிப்படையில்தான் ‘நர சேவை நாராயண சேவை’ என்ற முதுமொழி உள்ளது.

இந்த அனந்த சேவை / பக்தியை நாரதமுனி மிக உயர்த்தினார் அவரது ‘பக்தி சூத்திரம்’ எனும் பதிகத்தில். ‘பக்தி என்பது (இறைவனிடம்) அளவற்ற அன்பு’ என்கிறார். பொதுவாக நாம் அனைவரும் இறைவனுக்கு மனமாற நன்றி சொல்வதுகூட அரிது. இறைவனிடம் அன்பு என்பது நமக்கு இல்லை, அவனிடம் அளவற்ற அன்பு செலுத்த எப்படி நம்மால் இயலும்?

அன்பு பற்றி 18ஆம் நூற்றாண்டு ஆங்கில கவிஞர் ஒருவரது கவிதையை நான் பள்ளியில் மனப்பாடம் செய்தது நினைவு வருகிறது. அதில் அபு பென் ஆடம் என்பவர் கனவில் ஒரு தேவன் எழுதுவதைக்கண்டார். 

அபு: “என்ன எழுதுகிறாய்?”
தேவன்: “கடவுளை நேசிப்பவர்களின் பெயர்களை எழுதுகிறேன்”
அபு: “அதில் என் பெயர் உள்ளதா?”தேவன்: “இல்லை”
அபு: “(அப்படியானால்) என்னை மனிதர்களை நேசிப்பவர்களின்
பெயர்களில் எழுத வேண்டுகிறேன்.”
அடுத்த இரவில் அவன் கனவு, அதில் தேவனுடன் உரையாடல்.
அபு: “என்ன எழுதுகிறாய்?”தேவன்: “கடவுள் அருள் செய்யும்
பெயர்கள், அதில் முதல் பெயர் உனது. ”
https://www.poetryfoundation.org/poems/44433/abu-ben-adhem

இங்கு அஜாமில சரிதத்தில் பக்தியைக் குறிப்பது உள்ளத்தில் வேறு எண்ணங்கள் அனைத்தும் இன்றி இறைவனை மட்டும் எண்ணுவதே ‘அனந்தஸேவா’. ‘து’என்றால் அப்படி செய்தால் என்று பொருள். ‘நிக்ருன்ததி த்வயீம்’ அவ்விரண்டையும் களைகிறது என்று பொருள். எவ்விரண்டையும்? அவ்வித மன அலைகள், ஊழ்வினைச்சுமை இவ்விரண்டையும் நீங்குகின்றன இத்தகைய பணியால். அஜாமிலரின், அல்லது இவ்வாறு பக்தி உள்ளவரின் பாவங்களையும் அறுவித எண்ண அலைகளால் தூண்டப்பட்டு செய்த நல்வினை, தீவினைகளின் பலனாக புண்ணிய பாவங்களையும் நீக்குகிறது.

பொவாக நம்மால் அவ்வித பக்தி செய்ய இயலாது. நம் ஆறுவித எண்ண அலைகளின் வேகத்தை அறியாததாலும், அறிய முடியாததாலும், நாம் நன்மை, தீமை தரும் காரியங்களை செய்வோம். ஆகையால், ஓரளவு பக்தியோ அல்லது சிலகாலம் நம் துன்பங்களைக் களைய வேண்டி இறைவணக்கமோ செய்கிறோம். ஆகையால் இவ்வித நம் ஆசையும் கோபமும் நம் எதிரிகள் என்று எண்ணி மனிதன் அவைகளை அறவே நீக்க நீண்ட கால முயற்சி செய்யவேண்டும். ஆசை வசப்படாமல் இருக்க இயலும். அதன்மூலம் அடக்கமுடியாத கோபவசமாவதும் குறையும். இம்முயற்சிக்கு அடிப்படை பகுத்தறிவே! 

வேதாந்த புத்தகங்களில் நான்கு குணங்களை பிறப்பிறப்பெனும் கடல் தாண்ட முயல்வரின் அடிவாரமாக சொல்கின்றன — பகுத்தறிவு (விவேகம்), இவ்வுலக, மேலுலக ஆசையின்மை (வைராக்கியம்), அமைதி எனும் ஆறுவித மனநிலைகள் (அமைதி என்ற ஆறுவித மனப்பக்குவங்கள்), பிறப்பிறப்பெனும் பெரும் கடலைக்கடக்கும் ஆசை (முமுக்‌ஷுத்வம்). இந்த நான்கையுயும் ஒரு நாலுகால் கட்டிலுக்கு ஒப்பிடலாம். அக்கட்டிலை இழுக்க நான்கு கால்களையும் பிடிக்க வேண்டாம். ஒரு காலைப் பிடித்து பலமாக இழுத்தால் கட்டில் அசைவதைக் காண்கிறோம். அதுபோல் பகுத்தறிவென்ற ஒன்றை நன்கு இடையறாது கடைப்பிடித்தால் போதும். அதன் மூலம் நம் தீவிர ஆசைகளை வெல்லலாம். அதன் மூலம் கோபம் முதலான மற்ற ஐந்து மன அலைகளின் வேகத்தைக் குறைக்க முடியும். இம்முயற்சி நம் இறைவனிடம் பக்தியைப் பலப்படுத்தும். இதன் மூலம் இல்வாழ்க்கை நடத்தும் நமக்கும், மேலும் நம் குடும்பத்திற்கும், நம் சுற்றோர், மற்றும் நம் நண்பர்களுக்கும் அதிக நிம்மதி அளிக்க இயலும். 

முடிவுரை

அஜாமிலர் வாழ்ககையை ஒரு தஶகத்தில் அளித்த நாராயண பட்டத்திரி இடையறாத பக்தியால் அடையமுடியாது எதுவும் இல்லை என்கிறார். இக்கதையின் முக்கிய செய்திகள் சில. மனிதனின் செயல்கள் அவனது ஆசைகளால் உந்தப்பட்டவை, அவைகளை நிறைவேற்றவே இறைவனை நாடுகிறோம். இக்கதை நம் மரபில் ஒருவன் செய்யும் நல்வினை தீவினைப்பலன் அவன் இப்பிறப்புக்கு அப்பாலும் உள்ளது என்ற கொள்கையை விவரிக்கிறது. அக்கொள்கை— அவனது இப்பிறவியில் வரும் இன்ப துன்பங்கள் அவனது ஊழ்வினைச் சுமையின் ஒரு சிறு பகுதி பிராரப்த கரும பலனான இப்பூத உடலையும் அவனது இன்பதுன்ப அனுபவங்களையும் அளிக்கிறது. அப்படி இருப்பினும், இப்பிறவில் அவன் செய்யும் வினைகளின் பலன் அவனது இப்பிறப்புக்கு அப்பாலுள்ள ஸந்சித கருமச்சுமையுடன் புண்ணிய பாவச்சுமையை அதிகப்படுத்துகிறது. இந்த வருங்கால சுமையின் பெயர் ஆகாமி கருமம்.

நம் மறைகளிலும், மரபுகளிலும் உள்ள கட்டளைகளை செய்தால் இக்கரும வினைகள் நீங்குகின்றன. அப்படி இருப்பினும் இப்பிறவியில் மனிதனைத்துண்டும் ஆசை, கோபம், பிறர் பொருளை விரும்புதல், மனக்குழப்பம், பொறாமை எனும் அறுவித மன அலைகளை (காம, க்ரோத, லோப,மோஹ, மத, மாத்ஸர்ய) இவ்வித கருமங்களால் நீக்கமுடியாது. இதற்கு அஜாமிலனின் வாழ்க்கை உதாரணம். ஆயினும் மரண காலத்தில் இறைவனை இடையறாது, வேறெந்த எண்ணமும் இல்லாது முறையிட்டதால் இந்த குணங்களையும் இறைவன் அகற்றினான் என்பது அக்கதையின் முடிவு.

இந்த இடையரா பக்தி செலுத்த நம்மால் இயலாது. பொதுவாக, நம் நிறை வேற்றப்படாத ஆசைகளாலும், தேவைகளாலும் உந்தப்பட்டு அவைகளை நிறைவேற்றவே இறைவனை வணங்குகிறோம். அவனது ஆசிகளை மனதில் கொண்டு நன்றி செலுத்துமுறையில் துதிப்பவர் அரிது. இறைவனின் எவ்வித இவ்வுலக, மேலுக ஆசைகள் இன்றி இறைவனை வணங்குபவர் மிக அரிது. இவர்களிலும் இறைவன் வேறு, அவனை வணங்கும் நான் வேறு என்ற தன்மைகளை விடுத்து, இவ்வேற்றுமைகளின் அடிப்படை உண்மையான இரண்டற்ற உண்மையை உணர்பவர்கள் மிகமிக அரிதே.

இறைவனை நம் தேவைகளை மட்டும் நிறைவேற்ற வணங்குபவரது அடக்கமுடியா ஆசைகளையும் அதனது சந்ததியான கோபம் முதலானவைகளையும் மாற்ற முடியாது. அதனால் நம் நடத்தை ராவணனைப்போலவே இருக்கும், எவ்வளவு பெரிய பக்தனாக இருப்பினும். ஆகையால் நாம் நம் பகுத்தறிவை அயராமல் எந்நேரமும் தளராது பயன்படுத்தி இந்த குணங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் எனபது தெளிவாகத்தெரிகிறது. நம் குணங்களை இவ்வாறு கட்டுப்படுத்துமளவு நம் மன அமைதி அதிகமாகும். இம்முயற்சி இல்லையேல் நம் நடத்தை மாறாது என்பது இப்பதிகத்தின் உட்பொருள்.

I thank Sri. Krish Mani for editing this text.