முகவுரை

நான் முதல் ப்லாகில்  https://avagamanam.com/2022/02/நான்-கண்ட-நாராயணீயம்-முத/ பட்டத்திரியின் நாராயணீய இறை வணக்கப்பாடலில் உள்ள பல பதங்களின் ஆழ்ந்த கருத்தை விவரித்தேன். ஸாந்த்ரானந்த-அவபோதாத்மகம், உருபுருஷார்த்தகம்இவ்விரண்டு சொற்களை விளக்குவது இந்த ப்லாகின் குறிக்கோள். முதல் உருபுருஷார்த்தகம்என்ற சொல்லின் பொருள்

உருபுருஷார்த்தகம்

இந்த வடமொழிச்சொல் ஒரு கலவை (compound word, ஸமாஸம்). இம்மாதிரி பலசொற்களை இணைத்து ஒரே சொல்லாக மாற்றி, பொருளையும் மாற்றும் உதாரணங்கள் தமிழ் மொழியில் இல்லை. இக்கலவைகள் வடமொழியில் மிக மிக அதிகம்.இக்கலவையிலுள்ள சொற்கள் உரு, புருஷார்த்த, கம்.

 
புருஷார்த்தம்: நாம் யாவரும் வாழ்க்கையில் நாடுவதை நால் வகையாக கூரலாம். அவை —அறம், பொருள், காமம் / இன்பம், வீடு; வடமொழியில் தர்ம, அர்த்த, காம, மோக்ஷ. இவைகளை தமிழில் பால்கள் என்று அழைக்கின்றனர். திருவள்ளுவர் அறம், பொருள்,இன்பபம் என்ற முப்பால்களை மட்டும் 1,330 குறள்களில் புனைந்தார். இந்த நான்கு நாடுதல்களின் (அறம்,பொருள், காமம் / இன்பபம், வீடு) வடமொழிப் பெயர்ச்சி புருஷார்த்தம் எனும் கலவை உணர்த்துகிறது.

நாடுவது நான்கு இருப்பினும் சற்று ஆராய்ந்தால் பொதுவாக நாம் நாடுவதின் அடிப்படை காமமே! காமமெனும் சொல் சிற்றின்பம் (உடலுறவு) நாடுதல் என்று பொதுவாக நினைத்தாலும், அந்த வடமொழி சொல் நாம் ஆசைகள் யாவையும் குறிக்கிறது. இது சிற்றின்பம் என்றதன் பொருளே, சிறிய + இன்பம் = சிற்றின்பம்.

இப்படி இருக்கையில், நம் ஆசைகளை நிறைவேற்ற பொருள்கள் தேவை. ஆகையால் பொருள் நாடுதல் நம் இரண்டாவது நாடுதல். உலகில் எல்லோருக்கும்ஆசைகள் பற்பல உள்ளன. அனைவரும் தம்ஆசைகளை நிறைவேற்ற பொருள்கள் நாடின் அறம் இல்லையேல் துயரமே விளையும். ஆகையால் நாம் ஓரளவு அறத்தை கைப்பிடிக்க வேண்டும். இந்த ரீதியில் தான் அறம், பொருள் இரண்டும் காமத்துடன் மூன்று பால்களாக உள.
எவராலும் இன்ப ஆசைகளுடனோ, அல்லது துன்பம் துடைக்க ஆசைகளுடனோ மன அமைதி அடைய இயலாது. இந்த மன அமைதியைத்தான் நாம் ஆனந்தம் என்று நினைக்கிறோம். இந்த அமைதி / ஆனந்தம் அடைய உயிர் உடலில் உள்ள வரை முயற்சி செய்கிறோம்.

வீடு என்ற நான்காவது நாடுவதை மோக்ஷம் என்றும், விடுதலை என்றும், ஆனந்தம் என்றும், மேலும் பற்பல சொற்களால் மறைகள் ஓதுகின்றன. இந்த நான்காவது நாடல் எல்லாஆசைகள் நிரைவடைந்த போதுள்ள மனநிலை. இதை நாம் ஊகிக்க வேண்டியதுதான் ஏனென்றால் ஒரு ஆசை நிறைந்த உடன் பல ஆசைகள் உதிக்கின்றன. இந்த மனித நிலையை என் வேதாந்த ஆசிரியர் சுவாமி சின்மயானந்ததர் உவமையால் விவரித்தார்: ‘ஆனந்தத்தின் அளவுகோல் ஒரு பின்னம். அதன் மேலிலக்கம் உன் நிறை வேற்றிய ஆசை. அடி இலக்கம் உன் நிறை வேண்டிய ஆசைகள். ஓராசை நிறைவேற்றிய உடன் பல அதிக ஆசைகள் தோன்றுவது நமக்குத் தெரியும்! ஆகையால் அடியிலக்கம் மிக அதிகமாகிறது. அதன் பலன் ஆனந்த அளவுகோல் குறைகிறது. அதனால் தான் எவ்வளவு பொருள், புகழ், பதவி வரினும் ஆசைகள் குறைவதில்லை, நிரந்தர ஆனந்தமும், அமைதியும் கிடைப்பதில்லை.

இந்த நான்கான நிலையைத்தான், வீடென்பர், இதை பட்டத்திரி உருபுருஷார்த்தம், மிகச்சிறந்த நாடல் என்கிறார் முதற்பாசுரத்தில். ஏன்? நம்மில் மிகச்சிலரே இந்த நான்கு நாடல்களை ஆய்கின்னர். அப்படி ஆராய்பவர்கள் காமம், பொருள், அறம் என்ற மூன்று விடுத்த வீடென்பதே மனிதனுக்கு மிக தேவை என அறிவர். இவ்வடிப்படைத் தேவை காம ஆசைகளால் நங்கு மறைப்பது அவர்களுக்கு விளங்குகிறது. இருப்பினும் அவகளில் ஒரு சிலரே வீட்டை நாட முயல் கின்றனர். முயற்சி செய்பவருள் இதை அடைபவர்கள் மிகமிகச் சிலரே.

உருபுருஷர்த்தகம் என்ற கலவையில் கம் என்ற சொல்லின் பொருள் அடைவிப்பது, காண்பிப்பது, உணர்விப்பது என்ற தமிழ் சொற்கள். இவைகளில் எனக்கு உணர்விப்பது என்பது தான் சிறந்தது என்று தோன்றுகிறது. இதைப்பிறகு விளக்குகிறேன். உருபுருஷர்த்தகம்என்ற சொல்லின் பொருள் வீடளிப்பது (அந்த பிரம்மன்).

ஸாந்த்ரானந்தாவபோதாத்மகம்

ஸாந்த்ர-ஆனந்த-அவபோத-ஆத்மகம்என்பன இந்த கலவையில் உள்ள சொற்கள். இதன் பத உரை ‘பூர்ணமான ஆனந்த, ஞானத்தின் ஸ்வரூபமாக உடையது’ என்றுள்ளது. இங்கு அந்தக் கலவையில் உள்ள சொற்களை விவரிக்கிறேன்.

ஸாந்த்ர என்ற வடமொழிச்சொல்லுக்கு பல பொருள்கள் இருப்பினும் இங்கு நிறைந்த, அளவற்ற என்பன பொருந்தும்.

ஆனந்த — இச்சொல்தமிழ் மொழியிலும் பயன் படுத்தப்படுகிறது. இந்த பதம் வேதாந்தம் பயின்றவரும் நன்கு விவரிப்பதில்லை. பொதுவாக இதன் தத்சமம் மகிழ்ச்சி. இது காமப்பொருள் அடைந்த மகிழ்சி அல்ல. அந்த மகிழ்ச்சி அடுத்த காமம் மனதில் தோன்றும் வரைதான் இருக்கும். வீடு (மோக்ஷம்) அடைந்தவரின் நிலை வேறு. இந்நிலையை ஏசு கிருத்து ‘எண்ணமுடியாத அமைதி (peace that passeth understanding)’ என்றார். இந்த ஆனந்தத்தின் உள்ளர்த்தம் என்றும் அசையாத மன அமைதி என்று விவரித்தேன். இந்த அமைதியை வேண்டியே வேதம் ஓதுபவர்கள் ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி என்ற வாக்கியத்தை கடைசியில் ஓதுகின்றனர். வேதங்களின் குறிக்கோள் இந்த அளவற்ற, எக்காலும் வற்றாத, சூழ்நிலைகளால் பாதிக்க முடியாத மன அமைதி, இதை ஸாந்த்ரனந்தம் என்று பட்டத்திரி சொல்கிறார்.

அவபொதாத்மகம் — இதுவும் ஒரு கலவையே. வடமொழியில் கலவைகளை உபயோகிப்பது மிக அதிகம். ஏனெனில் பல சொற்களுக்கு கலவை மூலம் ஒரு சொல்லைப்பயன் படுத்த இயலும். இக்கலவையில் அவபோதஎன்றால் அறிலித்தல், உணர்வித்தல் என்று பொருள். இது உபநிடதங்களின் மறு பெயர். ஆத்மகம் என்பது அவ்வுணர்விப்பின் உட்பொருள்.

ஆகையால் ஸாந்த்ர-ஆனந்த-அவபோத-ஆத்மகம்என்ற இக்கலவையின் பொருள்: அளவற்ற அமைதியை உணர்விக்கும் உபநிடதங்களின் உட்பொருள் . அது அந்த கால, தேச, உலக சூழ்நிலை, மற்றும் பற்பல வரினும் இவ்வளவற்ற அமைதி உருவான பிரம்மன். இந்த அடிப்படை உண்மையை, அதாவது நான் பிரம்மனே (अहं ब्रह्मास्मि, அகம் பிரம்மன்) என உணர்ந்தவனை இப்பூவலகில் பிரம்மஞ்ஞானி என்று சொல்வர்.

அறிவும்உணர்வும்

அறிவு, உணர்வு என்ற இரு சொற்கள், சங்கராசாரியார் பயன்படுத்திய ஶ்ருப்ரஞ்ஞ , அவகதப்ரஞ்ஞ என்ற இரு சொற்களின் அடிப்படையாக உள்ளது. பொதுவாக ஆங்கிலத்தில் இவைகளை knowledge, experience (அனுபவம்) என்று மெழிபெயர்கின்றனர். இது சரியில்லை. ஏன்? மனிதனின் அனுபவம் ஐம்புலன்களால் அடைவது. அவனது உண்மை, உடல், ஐம்பலன்கள், மனம் இவைகளுக்கு அப்பால், என்றும் உள்ளதே!  உண்மையில் உணர்வு எனும் சொல்லும் இதை நன்கு விவரிக்க இயலாது! ‘அனுபவம்’ சரியில்லை, எனவே நான் அறிவு, உணர்வு என்றழைக்கிறேன்.

தமிழ் மறை என்று கருதப்படும் திருக்குறளில் ஒரு குறள் அறிவு, உணர்வு பற்றி குறிப்பிடுகிறது.
  “கற்க கசடற கற்பவை கற்ற பின் நிற்க அதற்குத்தக”
வேதாந்த தத்துவம் “கற்பவை கசடற” என்பதில் அடக்கம்! கற்க, கசடற என்பன எல்லாவித. கற்பவைகளுக்கும் பொருந்தும். இருப்பினும் வேதாந்த தத்துவம் நன்கறிய இவை மிக மிகத்தேவை. இதை ஒரு உபநிடத்தில் “கேட்க வேண்டும், ஆராய வேண்டும், நிலைப்படுத்த வேண்டும் (ஶ்ரோதவ்ய: மன்தவ்ய: நிதித்யாஸிதவ்ய:, பிரகதாரண்ய உபநிடதம்)” என்று உபதேசிக்கிறது. ஏனெனில் மற்றெல்லா அறிவுத்துரைகளை விட இவ்வறிவு நம் ஐம்புலன்களால் அறிவதையும், அதன்பலனாக மன உளைச்சலடைவதற்கு முற்றும் மாறாக உள்ளதே! 

“கற்ற பின் நிற்க அதற்குத்தக” என்பது உணர்வைக் குறிவிக்கிறது. இந்த உணர்வை வேதாந்த அறிஞர் அடையும் வழியைத்தான் “நிலைப்படுத்த வேண்டும்” என்று பிரகதாரண்ய உபநிடதம் அறிவிக்கிறது. அவ்வறிவுக்கும் உணர்வுக்கும் உள்ள இடைவெளி இரு கரையுமும் கடந்து ஓடும் ஆறுபோல் உள்ளது. ஆகையால் இந்த வேதாந்த உண்மையை அறிந்தும் அதன் முழுஉணர்வுடன் இருப்பது மிக அரிதே! இவ்விடைவெளியின் காரணமென்ன?

அறிவுக்கும் உணர்வுக்கும் உள்ள வேற்றுமை வேதாந்த தத்துவத்தில் மட்டுமே உள்ளது. மற்ற உலகியல் அறிவுகளில், மதங்கள் உட்பட இந்த வேற்றுமை இல்லை. ஏன்? இத்துறைகள் யாவும் அறிய வேண்டிய பொருள் அறிய விரும்புபவனுக்கு வேறானது. கிருமிகளை ஆராயும் விஞ்ஞானி வேறு, ஆராயப்படும் கிருமியும் வேறு. அந்த விஞ்ஞானி கிருமியாக விரும்பவில்லை! ஆனால் வேதாந்த தத்துவம், மனிதன், கடவுள் உலகம் என்றவைகளின் அடிப்படை உண்மையை ஆராய்பவனின் சொரூபமே அந்த இரண்டற்ற ஒன்றாகிய பிரம்மன். அதாவது, இந்த தத்துவம் ஆய்பவன், அவனிருக்கும் உலகம், மற்றும் அவன் வணங்கும் கடவுள் என்ற வேற்றுமைகள் அற்றது. அவன் சொரூபம் இந்த இரண்டற்ற ஒன்றே, ஆராய்வதற்கு முன்னும் எக்காலத்திலும் உள்ளது என்பதுதான் வேதாந்த அறிவு.

இது புத்தியளவில் இல்லாமல் ஆராய்பவன் தன்மயமாக்குதல் தான் நான் உணர்வு என்று கருதுகிறேன். அந்த உணர்வின் பலன் அவன் அறிவான், உலகமும் அறியும் இந்த உனர்வை வள்ளுவனார் ‘நிற்க அதற்குத் தக’ என்றுரைத்தார்.

வேதாந்த இரண்டற்ற ஒன்று பற்றிய அறிவு உணர்வாகக் கனிவது அரிதே! அதற்கு இரு முக்கிய இடர்கள் “இரு கரையுமும் கடந்து ஓடும் ஆறுபோல் உள்ளன.” இடர்வின் முதற் காரணம் நம் பூத உடலும் மனமும். மன அமைதியின்மையின் காரணம் உடல் நிலை! நீங்கா வறுமை, உடல் நோய் இவை இரண்டும் மன நிலையை பாதித்து இவ்வறிவை தன்மயமாக்க ஒரு மாபெரும் தடங்கலாக உள்ளது. உடல்நோயின் உதாரணம் நாராயண பட்டத்திரி அவர்களே. அவரது அளவற்ற வேதாந்த அறிவை முழு உணர்வாக மாற்ற இயலாதது அவர பதிகங்களில் விளங்குகிறது. அப்படி இருப்பினும் அவரது அவ்வேதாந்த அறிவு ஒவ்வொரு தசகத்திலும் தெளிவாகத் திகழ்கிறது.

இரண்டாவது காரணம் நம் ஸம்ஸ்காரம், அதாவது நம் பழக்கம். நாம் பல்லாண்டு காமவசப்பட்டு பொறாமை, ஆத்திரம், கடுமை, பொய்மை, பிறர் நலம் கருதாமை, தீமை என்ற பற்பலவைகளின் வசமாகிறோம். இவைகளின் வசமாவது வழக்கமானது. இதை முழுதும் நீக்க நாம் பலகாலம் முயலவேண்டும். இம்முயற்சியில் தளற்சி அடையாமல் இருப்பதும் மிக அரிதே. இருப்பினும் என் தந்தையின் ‘தின்ற மண்ணுக்கு சோகை உண்டு’ என்ற முது மொழிப்படி, நாம் முயன்ற அளவு பலன் உள்ளதென்பதை நான் மன அமைதியின்மை குறைவதில் காண்கிறேன்.

உண்மையும்தன்மையும்

உண்மை, தன்மை என்ற இருசொற்களை சற்று விவரித்து இந்த ப்லாகை முடிக்கிறேன். தங்க சங்கிலி, தங்க மோதிரம், தங்க உட்டியாணம், தங்க கங்கணம் இவையெலாம் தங்கத்தின் தன்மைகள். இவை உருவம், பயன், உரிமை, ஈடுபாடு என்ற குணங்களுக்கு உட்பட்டவை. தங்கத்தின் உண்மை இத்தன்மைகளுக்குப் பார்பட்டதென்பது நமக்கு நன்கு விளங்குகிறது. மேலும், வைரம், நிலக்கரி இவை இரண்டும் உண்மையான கரியின் இருவித தன்மைகளே என பௌதிக, இரசாயன விஞ்ஞானிகள் நன்குணவர். இருப்பினும் இந்த உண்மையால் வைரத்தின் தன்மை மாறாததே. இதுபோன்ற உலகப்பொருள்களின் உணர்வு இவ்விஞ்ஞானிகளின் உலக நடத்தையில் மாறுதல் இராது.

ஆனால் நான், என்னுலகம், நான் வணங்கும் இறைவன் எனும் இம்மூன்றின் உண்மை இரண்டற்ற ஒன்றே என்பது அறிவளவில் நிற்பதற்கே பல்லாண்டு உபநிடதங்கள் ஆசானிடம் கற்கவேண்டி உள்ளது! அப்படி அறிந்தும் நம் உலகத் தன்மைகள் நம்மை ஆட்டுவிக்கின்றன. தன்மைகள் மாறவில்லை, மாறாதனவே. இது நமக்குப் புரிவதில்லை. ஆகையால் பொறாமை, ஆத்திரம், கடுமை, பொய்மை, பிறர் நலம் கருதாமை, தீமை என்ற பற்பல குணங்கள் நம்மை விடுவதில்லை, இரும்பு விலங்குபோல் கட்டுப்படுத்து கின்றன. இதை முழுதும் நீக்கவே நாம் வேதாந்த உண்மையை மனதில் நிலைப்படுத்த வேண்டும்.

வேதாந்த இலக்கியங்கள் தன்மையை மித்யா என்றும் மாயா என்றும், உண்மையை சத்தியம் என்றும் முறையிடுகின்றன. ‘மாயைக்கடற்பது மிக்கடினம்’ என்று ஒரு உபநிடதம் போதிக்கிறது. என் ஆசான் இதைத்தான் ‘உண்மை உனக்கு விளங்காவிடினும் தன்மைகளை நன்கு அறிந்தால் மன அமைதி அடைவாய்’ என்றார். உதாரணமாக, பசி, தாகம் இவை உடலின் தன்மைகள், உண்மையை உணர்வதால் இவை மாறாது. அதுபோல் உலகத்தன்மைகளோ, உன்சுற்றார், மற்ற மனிதர்களின் சிறுமைகளோ, அத்தன்மைகளின் பலன்களோ மாறாதன! வேதாந்தம் அறிந்தவனோ, பக்தனோ, யோகியோ, நாத்திகனோ, மற்றெவரோ தமது வாழ்ககைகளை சற்று சிந்தித்தால் மன உளைச்சலுக்கு முக்கிய காரணம் நம் சுற்றார், நண்பர்கள், வேலையில் மேலதிகாரிகள், இவர்களின் தன்மைகள் மாறினால் நாம் மன அமைதி அடைவோம் என எதிர்பார்ப்பதே! இந்த தன்மைகளின் மாறாமை உலக நியதி என்று உணர்பவனுக்கு வேதாந்தம் தேவையில்லை. உணராதவனுக்கு வேதாந்தம் அறிவளவே நிற்கும். இது நன்கு விளங்க விளங்க நம் வேதாந்த அறிவு உணர்வாகக் கனியும்.

முடிவுரை

ஶ்ரீ நாராயண பட்டத்திரி அவர்களின் மிகச்சிறந்த நாராயணீயத்தின் முதற் பாசுரத்தின் ஆழ்ந்த கருத்துகளை என்னால் இயன்ற அளவு விவரித்துள்ளேன். இதிலுள்ள இலக்கண அல்லது தத்துவ விளக்க குறைகளை இதைப்படிக்கும் வித்தர்கள் என்னை மன்னிக்க வேண்டுகிறேன்

ஓம். ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி: (அமைதி, அமைதி, அமைதி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Post Navigation